CIVIL SERVICE தேர்வுகளுக்கு எப்படி தயாராவது?
சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு எப்படித் தயாராவது?''
'''எப்படிப் படிப்பது, எதைப் படிப்பது’ என்பதில்தான் இந்தத் தேர்வின் சூட்சுமமே அடங்கி இருக்கிறது. எப்படிப் படிப்பது எனத் தெரியாமல் எதைப் படித்தாலும் பயன் இல்லை. 'எப்படிப் படிப்பது?’ என்பதைப் புரிந்துகொள்ள, 'ப்ரிசிஸ் ரைட்டிங்’ (Precis writing) எனப்படும் சுருக்கமாக எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும். 300 வார்த்தைகள் உள்ள ஒரு பத்தியில் இருக்கும் செய்தியை, அதன் சுவாரஸ்யமும் உண்மைத்தன்மையும் குலையாமல் 100 வார்த்தைகளுக்குள் சுருக்கி எழுதும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்தத் திறமை இருந்தாலே எந்தத் தேர்வையும் எளிதில் சமாளிக்கலாம்.
ஒரு புத்தகத்தைப் படித்தால், அதன் அனைத்து பக்கங்களில் இருக்கும் செய்திகளையும் பதிந்துகொள்ள நம் மூளை, கம்ப்யூட்டர் இல்லை. குறிப்பிட்ட சில முக்கியமான தகவல்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ளும். அதனால் நாமே ஒரு செய்தி அல்லது கட்டுரையின் சாரம்சத்தை மட்டும் புரிந்துகொண்டு, அதை மட்டும் நினைவில் நிறுத்தப் பழக வேண்டும். பிறகு, அந்த நினைவுக் குறிப்புகளைக்கொண்டே, நான்கு பக்கக் கட்டுரையோ, நாலாயிரம் வார்த்தை கட்டுரையோ எழுதும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படை திறமையைத்தான் முதலில் எங்கள் பயிற்சி மைய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்போம்!
அடுத்து, 'என்கொய்ரிங் மைண்ட்’ பயிற்சி கொடுப்போம். அதாவது கேள்வி கேட்டு, அதற்குப் பதில் கண்டுபிடிப்பது. எதைப் படித்தாலும் அதில் சரியான இடத்தில் சரியான கேள்வி கேட்க வேண்டும். ஏன், எதற்கு, எப்படி, என்ன - இந்தக் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடித்தால் தெளிவு அதிகரிக்கும். இதில் ஒரு கேள்விக்குப் பதில் கண்டுபிடித்துவிட்டால் அது இன்னொரு கேள்விக்குக் கொண்டுபோகும். அந்தக் கேள்விக்கான பதில் மூன்றாவது, நான்காவது கேள்விகளுக்கு அழைத்துச்செல்லும். இப்படித் தெளிவு ஏற்படுத்திக்கொண்டு படித்தால் தேர்வில் வெற்றி சுலபம்.
ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வு என்பது, ஒரே நேரத்தில் மூன்று முதுகலைப் பட்டத்துக்கான தேர்வுகளை எழுதுவதுபோல சிரமமானது. அவ்வளவு பாடங்களைப் படிக்கும்போது அதில் எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது என்ற தெளிவு வேண்டும்!''
Comments
Post a Comment